திருச்சுழியில் விவசாயத்தை பாதிக்கும் 5 ஆயிரம் ஏக்கர் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருச்சுழி: திருச்சுழி பகுதியில் நீராதாரங்களைப் பாதிக்கும் 5 ஆயிரம் ஏக்கர் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஒன்றிய பராமரிப்பில் 450க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் கண்மாய்களை முறையாக ஆழப்படுத்தாமல் பெயரளவுக்கு குடிமராமத்து பணிகள் மேற்கொண்டனர். இதன் காரணமாக கண்மாய்களில் கருவேல மரக்காடுகளாக காட்சி தருகிறது. இதன் காரணமாக தண்ணீர் இருந்த அடையாளமே இல்லாமல் கண்மாய்கள் காட்சி தருகின்றன. இதன் காரணமாக பருவமழை தொடங்கி முடிந்த நிலையில் கண்மாய்களில் தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தென் மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகளவில் உள்ளதாலும், தற்போது கோடைகாலம் நெருங்கிவிட்ட நிலையில் கண்மாய்கள் நீர்வற்றும் நிலை உள்ளது. மேலும் கருவேல மரங்கள் நிலத்தடி நீருக்கு மிக பெரியபாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி பகுதியில் கருவேல மரங்களால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கிராமப்பகுதியை சேர்ந்த பலர் இடம் பெயர்ந்து நகரத்தை நோக்கி செல்ல தொடங்கி விட்டனர். 500 வீடுகள் இருந்த கிராமத்தில், தற்போது 50 வீடுகளை பார்ப்பதே அரிதாக உள்ளது. அந்தளவிற்கு கருவேல மரங்கள் விவசாயத்தை நிலைகுலைய செய்து வருகிறது.

சிறுமழையை நம்பி எள், சோளம், கம்பு விவசாயம் செய்தால் கருவேல மரத்தின் தாக்கத்தால், பயிர்கள் வளர்ச்சி அடைவதில்லை. விவசாயிகளுக்கும், உழுத கூலி கூட கிடைப்பதே கஷ்டமாக உள்ளது. நிலத்தடி நீர், விவசாயத்திற்கு வேட்டு வைக்கும் இந்த மரங்களை, வேரோடு அழிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். ஏனெனில், விருதுநகர் மாவட்டத்தில் 60 சதவீதம் நிலங்களில் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. திருச்சுழி தாலுகாவில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் மேற்பட்ட பரப்பளவில், கருவேல மரங்கள் உள்ளன. இவற்றால் இங்கு நிலத்தடி நீர் மட்டம் பாதிப்படைந்துள்ளது.

விவசாயம் செய்யும் நிலத்தின் அருகே, கருவேல மரம் இருந்தால், 10 அடி தூரத்திற்கு விவசாயம் பாதிப்படைகிறது. மாவட்டத்தில் உள்ள கண்மாய்களை தூர்வாறினாலே, கருவேல மரங்களை வேரோடு, அப்புறப்படுத்தி விடலாம் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் சீனிவாசன் கூறுகையில், `` விவசாய நிலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலுமே, கருவேல மரங்கள் உள்ளன. வரத்துக் கால்வாய்களிலும் அதிக அளவில் அடர்ந்துள்ளதால், மழை பெய்தாலும், தண்ணீர் ஓடி வருவதில்லை. இதனால், பயிர்களுக்கும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இது தொடர்பான தடுப்பு நடவடிக்கை அதிகாரிகளிடம் இல்லை. கண்மாய்களில் இது போன்ற மரங்களை வெட்டி ஏலம் விடுவதில்தான், அதிகாரிகளிடம் ஆர்வம் உள்ளது. அதை முழுமையாக அகற்ற, எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்றார்.

திருச்சுழி கம்யூனிஸ்ட் நகர செயலாளர் ரமேஷ் கூறுகையில்,`` திருச்சுழி, ஆனைகுளம், கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. விவசாய பகுதிகள், வறண்ட கண்மாய்களில் இந்த வகை மரங்கள் தானாக வளர்கின்றன. இதனால், ஒரு கண்மாயில் இருந்து மற்ற கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் பிரச்னை ஏற்படுகிறது. மடைப்பகுதியில் அருகே மரங்கள் வளர்வதால், வலுவிழந்து போகும் நிலை உள்ளது. கண்மாய்களை பராமரிக்கும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், கருவேல மரங்களை அகற்றுவதில் அக்கறை செலுத்த வேண்டும்’’ என்று கூறினார்.

Related Stories: