×

சிக்ரி பரிசோதனை கருவி மூலம் 15 நிமிடங்களில் மண் பரிசோதனை: கலெக்டர் தகவல்

காரைக்குடி: சிக்ரி கண்டுபிடித்துள்ள மண்பரிசோதனை கருவி மூலம் 15 நிமிடங்களில் மண்பரிசோதனை செய்து விவரத்தை பெறலாம் என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார். காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக (சிக்ரி) விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மண்பரிசோதனை கருவியினை விவசாயிகள் பயன்படுத்த வசதியாக வேளாண்மைத்துறைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இயக்குநர் கலைச்செல்வி தலைமை வகித்தார். கலெக்டர் மதுசூதன்ரெட்டி மண்பரிசோதனை கருவியினை வேளாண்துறை அலுவலர்களிடம் வழங்கி பேசுகையில், விளைநிலங்களில் மண் நன்றாக இருந்தால்தான் நாம் மேற்கொள்ள உள்ள பயிர்வகைகள் நல்ல மகசூலை பெற முடியும். மணிபரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு 4 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை ஆகும். இதனால் காலவிரயம், பொருட்செலவு ஏற்பட்டு வந்தது. பெரும்பாலான விவசாயிகள் உத்தேச அடிப்படையில் மண்ணில் என்ன சத்து குறைந்துள்ளது என்பதை கணக்கிட்டு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் விவசாயிகள் இருந்த இடத்தில் இருந்து விளைநிலங்களில் உள்ள மண்ணின் தன்மையை கண்டறிய வசதியாக சிக்ரி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் சார்பில் இந்த மண் பரிசோதனை கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மண்ணில் என்ன குறைபாடு உள்ளது என்பதை கண்டறிந்து தேவையான அளவு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் அளவு சரியாக உள்ளதா, இல்லாவிட்டால் எது குறைவாக உள்ளது என அறிந்து அதற்கேற்ப ஊட்டச்சத்து வழங்கலாம். ஒவ்வொரு வட்டார அளவில் உதவி வேளாண்துறை அலுவலர்கள் தலைமையில் வேளாண்துறை விரிவாக்க அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாக எடுத்துச் சென்று விவசாயிகள் முன்னிலையில் மண் பரிசோதனை செய்வார்கள். 15 நிமிடங்களில் மண் பரிசோதனை செய்து உரிய விவரத்தை பெறலாம். குறைந்த கட்டணம் செலுத்தினால் போதும் என்றார். சிக்ரி ஆராய்ச்சி மைய ஓய்வு பெற்ற இயக்குநர் பாலகிருஷ்ணன், குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி மைய தலைவர் செந்தூர்குமரன், இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன், பேராசிரியர்கள் மதியரசன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருச்சியில் இருந்து கரூர் வரை...