×

செம்பனார்கோயில் அருகே செல்லப்பார் கோயில் கும்பாபிஷேகம்

செம்பனார்கோயில், பிப்.7:செம்பனார்கோயில் அருகேயுள்ள செல்லப்பார் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே பரசலூர் ஊராட்சி மேலக்கட்டளை கிராமத்தில் பழைமை வாய்ந்த செல்லப்பார் கோயில் உள்ளது. இக்கோயிலில் சாஸ்தாவின் ரூபங்களில் ஒருவரான குமாரசாஸ்தாவாக வீற்றிருந்து செல்லப்பார் என்ற திருநாமத்துடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். செம்பனார்கோயில் சொர்ணபுரீஸ்வரர், பரசலூர் வீரேட்டேஸ்வரர் ஆகிய கோயில்களில் உள்ள சாமிகளுக்கு எல்லை காவல் தெய்வமாக செல்லப்பார் சாமி விளங்குகிறார்.

இத்தகைய சிறப்புகளை கொண்ட இக்கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாக குண்டங்கள் அமைத்து அதில் பல்வேறு நறுமணப் பொருட்களை செலுத்தி சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் மகா பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யானை ஊர்வலத்துடன் புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து கோபுரத்தை அடைந்தனர். அங்கு வேதங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags : Sembanarkoil Temple Kumbabhishekam ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு