×

தஞ்சை அருகே தஞ்சபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

தஞ்சை, பிப்.7: தஞ்சை அருகே வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள தஞ்சபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோவில்களில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள தஞ்சபுரீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இங்கு சிவன் மேற்கு நோக்கி வீற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குபேரன் இலங்கையை ஆட்சி செய்து வந்தபோது தனது செல்வங்களை ராவணனிடம் இழந்தார். இழந்த செல்வங்களை மீட்பதற்காக குபேரன் தஞ்சபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபட்டதாகவும், இத்தலத்து சிவனின் அருளால் இழந்த செல்வங்களை ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் திரும்ப பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் குபேர யாகம் நடைபெற்று வருகிறது.

இந்த கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன், அய்யப்பன், நடராஜர், தட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி, சரஸ்வதி, குபேரன், பஞ்சமுக ஆஞ்சநேயர், நவக்கிரகம், அம்மன் ஆகியோருக்கு தனி, தனி சன்னதிகள் உள்ளன. மூலவராக தஞ்சபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். கடந்த 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்ய்ப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தன. பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததையடுத்து நேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

முன்னதாக கடந்த 31ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. நேற்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. காலை 7 மணிக்கு பரிவார யாகசாலை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மூலஸ்தான திருக்கடங்கள் மற்றும் சுவாமி, அம்பாள் விமான திருக்கடங்கள் புறப்பட்டது. இதையடுத்து அனைத்து விமானங்கள், ராஜ கோபுரங்கள், தஞ்சபுரீஸ்வரர், ஆனந்தவல்லி அம்மன் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : Kumbabhishekam ,Thanjavur Temple ,Thanjavur ,
× RELATED தேவங்குடி கோதண்ட ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம்