×

கொள்ளிடம் அடுத்த எருக்கூரில் நவீன அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கரித்துகள்

கொள்ளிடம், பிப். 5: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. சீர்காழி வட்டத்தில் உள்ள 37 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இங்கு அவியலிட்டு அரைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஆலையில் நிலை1, நிலை2 என நெல் பதப்படுத்துல் மற்றும் அரவைப்பகுதிகள் உள்ளன. நெல்லை வேகவைத்து அரைத்து பின்னர் அரிசியாக்கி மூட்டைகளாக கிடங்கில் பாதுகாத்து ஆக்கூர், சித்தர்காடு, நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

நாளொன்றுக்கு சுமார் 220டன் நெல் இந்த ஆலையில் அரைக்கப்படுகிறது. இவ்வாறு நெல்லை அரைக்கம்போது உமிதுகள் கரித்துகள்களாக மாறி அந்த பகுதி முழுவதும் காற்றில் பறக்கிறது. சீர்காழி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கரித்துகள்கள் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால் விபத்து ஏற்படுகிறது. இதனால் பல வாகன ஓட்டிகள் கண் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலர் கண் பார்வையை இழந்தும் உள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2014ம் ஆண்டு ரூ.64.27 கோடி செலவில் கரித்துகள் காற்றில் பறக்காத வகையில் நவீனப்படுத்தும் பணி தொடங்கி நடந்து முடிந்தது.

ஆனால் மீண்டும் கரித்துகள்கள் வெளியேறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். உமியுடன் கரித்துகள் மீண்டும் காற்றில் பறக்கத் தொடங்கியுள்ளதால் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த குடியிருப்புகள் நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் கரித்துகள்கள் படிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் ஆலை அமைந்துள்ள பகுதியிலேயே கருத்துகளை பாதுகாத்து சேமிக்க புதிய பொறியியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Erukkur ,Kolli ,
× RELATED தஞ்சாவூர் ராஜப்பா பூங்காவில் மக்கள்...