வெளி மாநில வரத்தால் விலை குறைந்தது தேங்காய் கடமலை-மயிலை ஒன்றிய விவசாயிகள் கவலை

வருசநாடு: வெளி மாநில வரத்து, விளைச்சல் அதிகரிப்பு காரணங்களால் மார்க்கெட்டுகளில் தேங்காய் கொள்முதல் விலை குறைந்துள்ளது. இதனால், கடமலை-மயிலை ஒன்றிய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்புகள் உள்ளன. இப்பகுதியில் விளையும் தேங்காய்களை தேனி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் உள்ள சந்தைகளுக்கும், காங்கேயம், திருச்சி ஆகிய நகரங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இந்நிலையில், இந்த ஒன்றியத்தில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதுதவிர ஆந்திரா, கர்நாடாகா ஆகிய மாநிலங்களிலிருந்து தேங்காய்கள் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகின்றன.

தேங்காய் கொள்முதல் விலை குறைந்து வருகிற்து. ரூ.12 வரை விற்ற தேங்காய் தற்போது ரூ.10 ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது. ஒரு டன் தேங்காய் ரூ.23 ஆயிரம் வரை மட்டுமே விற்பனையாகிறது. போதிய விலை இல்லாத சமயங்களில், தேங்காய்களை உடைத்து காய வைத்து கொப்பரைக்கும் அனுப்புகின்றனர். தற்போது கொப்பரை தேங்காயும் விலை குறைந்துள்ளது. இதனால், ஒன்றியத்தில் குடோன்களில் தேங்காய்களை இருப்பு வைத்துள்ளனர். எனவே, தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: