×

தேனியில் பறக்கும்படையுடன் கலெக்டர் ஆலோசனை

தேனி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தேனி கலெக்டர் அலுவலகத்தில் பறக்கும்படை குழுவுடன் கலெக்டர் நேற்று ஆலோசனை நடத்தினார். தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகளில் உள்ள 513 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு தேர்தல் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. இதை கண்காணிக்க 84 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படைக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி மற்றும் மாவட்ட கலெக்டரின் தேர்தலுக்கான நேர்முக உதவியாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் முரளீதரன் பேசுகையில், ‘பறக்கம் படையினர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு சமூக விரோதிகளால் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் ஏதும் உள்ளதா எனவும், பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குக்காக மது, பணம், பொருள் வழங்கப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்.

உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமான தொகை மற்றும் அதற்கு மிகையான பொருள்கள் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும். வேட்பாளர் அல்லது முகவர் அல்லது வேட்பாளரின் கட்சி நபர் மூலம் ரூ.10 ஆயிரத்திற்கு மேற்படும் சுவரொட்டிகள், தேர்தலுக்கான பொருள்கள், பரிசுப்பொருள்கள், ஆயுதங்கள், மதுபாட்டில்கள் மற்றும் போதை பொருள்கள் எடுத்து வரக்கூடிய வாகனங்களை பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரும் தகவல்களை கவனமுடன் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Theni Flying Squadron ,
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...