×

பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக பரம்பிக்குளத்திற்கு பஸ் சேவை துவக்கம்

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அரசு பஸ் டிப்போவிலிருந்து பொள்ளாச்சி வழியாக பரம்பிக்குளத்திற்கு மூன்று ஆண்டுக்கு பின்னர் மீண்டும் கேரள அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து தினமும் காலை 8.20 க்கு புறப்படும் அரசு பஸ் கொழிஞ்சாம்பாறை, கோபாலபுரம், பொள்ளாச்சி, ஆனைமலை, சேத்துமடை, டாப்சிலிப், ஆனைப்பாடி வழியாக பரம்பிக்குளத்திற்கு மதியம் 12 மணிக்கு சென்றடைகிறது. இந்த பஸ் திரும்ப பரம்பிக்குளத்திலிருந்து மதியம் 12.30க்கு புறப்பட்டு ஆனைப்பாடி, டாப்சிலிப், சேத்துமடை, ஆனைமலை, பொள்ளாச்சி, கோபாலபுரம், கொழிஞ்சாம்பாறை வழியாக பாலக்காட்டிற்கு மாலை 4.30க்கு வந்தடைகிறது.

வெள்ளச் சேதத்தால் பரம்பிக்குளம் மலை வழி சாலைகள் மிகவும் மோசமடைந்த நிலையில், பாலக்காடு - பரம்பிக்குளம்  பாலக்காடு கேரள அரசு பஸ் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று காலளவில் பயணிகள் கூட்டம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டது.
தற்போது, கொரோனா தொற்று நோய் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்தும், கேரள, தமிழக மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, எம்.எல்.ஏ., பாபு, முதலமடை கிராமப்பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கேரள போக்குவரத்துத்துறை அமைச்சரிடமும், போக்குவரத்தறை நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து பாலக்காட்டிலிருந்து பரம்பிக்குளத்திற்கு மீண்டும் கேரள அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல் பயணத்தில் எம்.எல்.ஏ. பாபு, முதலமடை கிராமப்பஞ்சாயத்து தலைவர் கே.பேபிசுதா, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் எம்.ஸ்ரீரீதரன், பஞ்சாயத்து உறுப்பினர் செல்வி, கேரள அரசு பஸ் ஊழியர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர்மக்கள் பயணித்தனர். பரம்பிக்குளத்தில் பழங்குடியின பெண்கள் பராம்பரிய வழக்கப்படி  ஆரத்தி எடுத்து முதல் பயணம் மேற்கொண்டவர்களை வரவேற்றனர்.

Tags : Palakkad ,Parambikulam ,Pollachi ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...