அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம்

அரியலூர், பிப்.4: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வெற்றியூரில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை கலெக்டர் ரமண சரஸ்வதி, நேற்று நேரில் பார்வையிட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் நலன்காக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருமானூர் ஒன்றியம் வெற்றியூரில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கால்நடை வளர்ப்பவர்களுக்கு தாது உப்பு கலவையும், சிறந்த கிடேரிக்கன்று வளர்த்த 7 நபர்களுக்கு பரிசுகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இம்முகாமில், வெற்றியூர் ஊராட்சி மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாடு, ஆடு மற்றும் கோழி போன்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கைமுறை கருவூட்டல் செய்தல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை அளித்தல், தாது உப்புக்கலவை வழங்குதல், கோமாரி நோய் தடுப்பூசி, கோழி கழிச்சல்களுக்கான தடுப்பூசி, சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகள் சுமார் 500 கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது. தீவன பயிர்கள் மற்றும் தீவனப்புல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மொத்தம் 120 முகாம்கள் நடத்தப்படுகிறது. இச்சிறப்பு முகாம் தொலைதூரத்தில் உள்ள குக்கிராமங்கள் மற்றும் கால்நடை மருத்துவ வசதி கிடைக்காத இடங்களுக்கு கால்நடைகளின் நலன் பேணி காத்திடும் வகையில் இலவசமாக நடத்தப்படவுள்ளதால் ஏழை, எளிய கால்நடை வளர்ப்போர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இம்முகாமினை கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறும் வகையில் சிறந்த முறையில் தொடர்ந்து நடத்திடவும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஹமீதுஅலி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: