×

வார்டு உறுப்பினர் பதவி ரூ.24 லட்சத்துக்கு ஏலம்? இடைக்கழிநாடு பேரூராட்சியில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்: பொதுமக்களிடம் ஆர்டிஓ விசாரணை

செங்கல்பட்டு: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி செய்யூர் வட்டத்தில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில், 14வது வார்டில்  ஊத்துக்காட்டான் குப்பம், தண்டுமாரியம்மன் குப்பம் ஆகிய பகுதிகள் வருகின்றன. இதில், ஊத்துக்காட்டான் குப்பம் பகுதியில் 450 வாக்காளர்களும், தண்டுமாரி குப்பம் பகுதியில் 650  வாக்காளர்களும் உள்ளனர். இதில், தண்டுமாரியம்மன் குப்பத்தில் பெரும்பான்மையான வாக்காளர்கள் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் ஒன்று கூடி பேசி 14வது வார்டினை ஏலம் விட்டு, ரூ. 1 லட்சத்தில் துவங்கி இறுதியாக ரூ.24 லட்சத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது.

14வது வார்டு உறுப்பினர் பதவியை, அதே  பகுதியை சேர்ந்த ஒரு தரப்பு மக்கள்  ஏலம் விட்டுள்ளனர். ஊத்துக்காடு அம்மன் தெருவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர்  எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், வார்டு உறுப்பினர் பதவி ரூ.24 லட்சம் வரை ஏலம் போனது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலம்பரை குப்பத்தை சேர்ந்த மக்கள், நேற்று முன்தினம் செங்கல்பட்டு கலெக்டர்  அலுவலகம் சென்றனர். அங்கு, நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி வாக்காளர் அட்டை மற்றும் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் கலெக்டர் இல்லை. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், யாரும் சமரசம் பேசவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்பட்டோர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, தங்களது வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள், அவர்களிடம் சமரசம் பேசி, கலெக்டர் வந்தவுடன் இதுபற்றி தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள், அதிகாரிகளிடம், தங்களது மனுக்களை அளித்து விட்டு சென்றனர். அப்போது அவர்கள் கூறுகையில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அப்பகுதியில் தள்ளி வைக்க வேண்டும். வார்டு மறுவரையறை செய்த பின்னரே தேர்தல் நடத்த அனுமதிக்க வேண்டும். மீறி தேர்தல் நடந்தால், தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றனர். இதேபோல், அதே பேரூராட்சி 13வது வார்டிலும் இதேநிலை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கலெக்டரின் உத்தரவுபடி, மதுராந்தகம் ஆர்டிஓ சரஸ்வதி, மதுராந்தகம் டிஎஸ்பி பாரத், இடைக்கழிநாடு பேரூராட்சி செயலர் ஆகியோர், ஏலம் விட்டதாக கூறப்படும் 2 வார்டுகள் அடங்கிய பகுதிக்கு நேற்று சென்று, அங்குள்ள மக்களிடம் விசாரித்தனர். பின்னர், ஊத்துக்காட்டான் குப்பம் மக்களிடம், சூனாம்பேடு காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள், வார்டு வரையறை செய்து ஊத்துக்காட்டான் குப்பத்தை தனி வார்டாக அறிவிக்க வேண்டும். அதுவரை தேர்தலை புறக்கணிக்கப்போம் என தெரிவித்தனர். அதிகாரிகள் நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை.  அப்பகுதி மக்கள் உடன்படாததால் தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Ward ,Interstate Municipality ,
× RELATED போலீஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து