×

கடலை மிட்டாய் வியாபாரியிடம் ₹1.50 லட்சம் பறிமுதல் வந்தவாசியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி மினிலாரியில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டது

வந்தவாசி, பிப்.3: வந்தவாசியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கடலை மிட்டாய் வியாபாரி, மினி லாரியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ₹1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள், வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு, தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று காலை வந்தவாசி சவேரியார்பாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த மினிலாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், மினிலாரியில் வந்த ஒருவரிடம் ₹1.50 லட்சம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்த சீனிவாசன்(35), கடலை மிட்டாய் வியாபாரி என தெரியவந்தது. இவர் காஞ்சிபுரத்தில் கடலை மிட்டாய் விற்றுவிட்டு, அதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு, வந்தவாசியில் கடலை மிட்டாய் விற்பனை செய்வதற்காக வந்ததாக தெரிவித்தார். ஆனால், அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் ₹1.50 லட்சத்தை பறிமுதல் செய்து, வந்தவாசி நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான முஸ்தபாவிடம் ஒப்படைத்தனர்.

Tags : Election Flying Corps ,Vandavasi ,
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...