×

கன்னியாகுமரி பகவதிஅம்மன் வீதி உலா முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு


கன்னியாகுமரி, பிப். 3: தை அமாவாசை விழாவையொட்டி வெள்ளி கலைமான் வாகனத்தில் கன்னியாகுமரி பகவதிஅம்மன் வீதி உலா மற்றும் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடந்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தை அமாவாசை விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அன்று இரவு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர். பின்னர் இரவு 10 மணிக்கு முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடந்தது. முன்னதாக ஆராட்டு மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. வருடத்தில் 5 முக்கிய விழாவிற்கு  மட்டுமே திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தார். முன்னதாக கோயில் உள் பிரகாரத்தில் வெள்ளி பல்லக்கில் அம்மன் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. இதில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மேலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanyakumari ,
× RELATED வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை