புதுச்சேரியில் இருந்து புதுக்கோட்டைக்கு 2400 போலி மதுபாட்டில்கள் கடத்தல்

கடலூர், பிப். 3: புதுச்சேரியில் இருந்து மினி லாரியில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி விஜிகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார், கடலூர் திருவந்திபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பில்லாலி தொட்டி பாலம் வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் காய்கறி பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பெட்டிகளை அகற்றிவிட்டு சோதனை செய்தபோது, 46 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது.இதையடுத்து லாரியை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.  அதில், அறந்தாங்கியை சேர்ந்த சுப்பையா மகன் சரவணன் (34) என்பதும், புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக புதுக்கோட்டைக்கு மதுபாட்டில்களை கடத்திச் செல்ல இருந்ததும் தெரியவந்தது.  

இதையடுத்து 2400 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சரவணனை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும். இது குறித்து டிஎஸ்பி விஜிகுமார் கூறுகையில், இந்த மது பாட்டில்கள் அனைத்தும் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில்கள் போல போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மது பாட்டிலிலும் வெவ்வேறு சீரியல் எண்கள் இருக்கும். ஆனால் இந்த மது பாட்டில்களில் அனைத்திலும் ஒரே சீரியல் எண்கள் இருந்ததால் இவை போலி மதுபாட்டில்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய இந்த மதுபாட்டில்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

Related Stories: