கமுதி பள்ளி அருகே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோர்ட்டில் வழக்கு: மின்சார வாரியம் பரிசீலிக்க உத்தரவு

மதுரை: பள்ளி அருகேயுள்ள சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றுவது குறித்து மின்சார வாரியத்தினர் பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த சிங்கமுத்து, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கமுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே அதிகளவில் சேதமான நிலையில் மின் கம்பம் உள்ளது. மின்கம்பத்தின் அருகிலேயே டிரான்ஸ்பார்மரும் உள்ளது. இது பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. சிறு விபத்து ஏற்பட்டால் கூட பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே, கமுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுற்றுச் சுவர் அருகேயுள்ள சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் மனுதாரர் கோரிக்கையை மின்சார வாரியம் தரப்பில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: