நடுக்கடலில் காலி மதுபாட்டில்களை வீசி காசிமேடு மீனவர்கள் மீது தாக்குதல்: 4 பேர் கும்பலுக்கு வலை

தண்டையார்பேட்டை: நடுக்கடலில் காலி மதுபாட்டில்களை வீசி காசிமேடு மீனவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். காசிமேடு பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்னண்(65), அன்பு(68), ஜெயபால்(63), ஆறுமுகம்(62) ஆகியோர் மீன்பிடிக்க இரு தினங்களுக்கு முன் மாலை கடலுக்கு சென்றனர். பட்டினம்பாக்கம் அருகே சென்றபோது, சிறிய பைபர் படகில் வந்த 4 பேர் கும்பல் திடீரென விசைப்படகை சுற்றி வளைத்தது. பின்னர் அந்த கும்பல் காலி மதுபாட்டில்களை எடுத்து விசைப்படகில் வந்தவர்கள் மீது சரமாரி வீசி தாக்குதல் நடத்தியது.

தொடர்ந்து, விசைப்படகில் ஏறி 4 மீனவர்களையும் தாக்கிவிட்டு, திசைகண்டறியும் ஜிபிஎஸ் கருவி மற்றும் தகவல் தொடர்பு கருவியான வயர்லஸ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியது. இந்த தாக்குதலில் மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மர்ம கும்பல் திருடி சென்ற பொருட்களின் மதிப்பு ₹75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதையடுத்து, உயிர் பயத்தில் மீன்பிடிக்க செல்லாமல் காசிமேடு திரும்பிய மீனவர்கள், நடந்த விவரம் குறித்து விசைப்படகு உரிமையாளர் ராஜாவிடம் கூறினர். இதுகுறித்து காசிமேடு மீன்வள இயக்குநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: