×

தண்டையார்பேட்டை பகுதியில் ரசாயனம் கலந்த அப்பளம் தயாரித்த கம்பெனிக்கு சீல்: 16.5 டன் அப்பளம் பறிமுதல்

தண்டையார்பேட்டை: சென்னையில் ரசாயனம் கலந்த அப்பளம் தயாரித்த கம்பெனி மற்றும் விற்பனை செய்த கடைகளில் இருந்து 16.5 டன் அப்பளத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேற்கண்ட கம்பெனி மற்றும் கடை, குடோனை மூடி சீல் வைத்தனர்.
கொத்தவால்சாவடி ஆச்சாரப்பன்  தெருவில் உள்ள அந்தாராம் என்பவருக்கு சொந்தமான கடையில் ரசாயனம் கலந்த அப்பளம் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில்  அதிகாரிகள் சதாசிவம், செல்வம், கண்ணன், அழகு பாண்டி, ஜெயகோபால் ஆகியோர் நேற்று அந்த கடையில் சோதனை நடத்தினர். அப்போது,  ரசாயனம் கலந்த அப்பளம் விற்பது உறுதி செய்யப்பட்டது.
 மேலும் அவருக்கு சொந்தமான குடோனில் 1.5 டன் ரசாயனம் கலந்த அப்பளம் இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து அந்த குடோனை மூடி சீல் வைத்தனர். பரிசோதனைக்காக மாதிரி எடுத்து தஞ்சாவூரில் உள்ள சோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சவுகார்பேட்டையை சேர்ந்த விக்ரம் ஜெயின்  (42) என்பவருக்கு சொந்தமான கம்பெனியில் இருந்து அப்பளங்களை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த கம்பெனிக்கு சென்று அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, வடமாநிலத்தை சேர்ந்த 10 ஊழியர்கள் ரசாயன கலந்து அப்பளம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதும், அங்கு  15 டன் ரசாயனம் கலந்த அப்பளம்  இருப்பதும் தெரியவந்தது. அங்கிருந்து 15 டன் அப்பளம்,  250 கிலோ ரசாயனம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த கம்பெனியை மூடி சீல் வைத்தனர்.

Tags : Thandayarpet ,
× RELATED தண்டையார்பேட்டையில் நெட்சென்டர்...