ஆத்தூர், நரசிங்கபுரத்தில் வாக்குச்சாவடி, வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் ஆய்வு

ஆத்தூர்: ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், கீரிப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை நேற்று சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு தேவையான கூடுதல் பாதுகாப்புகள் மற்றும் வாக்குப்பதிவுகளை வீடியோ பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் நரசிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆத்தூர் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைய உள்ள நகராட்சிகளின் வாக்கு எண்ணும் மையங்களையும் அதற்கான ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சேலம் எஸ்பி ஸ்ரீஅபிநவ், சிறப்பு உதவி கண்காணிப்பாளர் மதுக்குமாரி, ஆத்தூர் ஆர்டிஓ சரண்யா, நகராட்சி ஆணையாளர்கள் மகேஸ்வரி, பென்னம்பலம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: