ஊட்டியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

ஊட்டி: நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. குறிப்பாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்த நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. துவக்கத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்பின், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. அதேபோல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டன. தமிழகத்தில் உள்ள அனைத்து வழிப்பாட்டு தலங்களும் வார விடுமுறை நாட்களில் மூட உத்தரவிடப்பட்டது. மேலும், கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு போன்ற காரணங்களால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கடந்த 15 நாட்களாக மிகவும் குறைந்து காணப்பட்டது. இருப்பினும், ஒரு சிலர் வந்து சென்றனர்.

இந்நிலையில், நேற்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் பைக்காரா போன்ற சுற்றுலா தலங்களில் மிகவும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே காணப்பட்டனர்.

Related Stories: