×

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கெடுபிடி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.8.2 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹8.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் பறக்கும் படை அமைத்து, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம், பொருட்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் பழைய ரயில்நிலையம் சாலையில் வேளாண் துறை அலுவலர் கோபால் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் மேத்தா என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி ₹7.5 லட்சம் எடுத்து செல்வது தெரிந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அதனை காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணனிடம் ஒப்படைத்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தற்போது பணத்தை திருப்பித் தர இயலாது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், தேர்தல் முடிந்த பிறகு பணம் உரியவரிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மதுராந்தகம்: மதுராந்தகம் - சூனாம்பேடு சாலை, முதுகரை பகுதியில் சமூக நலத்துறை வட்டாட்சியர் துரைராஜ் தலைமையில் எஸ்ஐ தனஞ்செயன், காவலர் விசாலாட்சி ஆகியோர் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் திருக்கழுக்குன்றம் அருகே பெருமாள் ஏரி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (45) என்பவர் உரிய ஆவணம் இன்றி ₹70 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags : Urban Local Election ,Kedupidi ,
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்...