×

களியக்காவிளை அருகே மகனின் நினைவு தினத்தில் திமுக நிர்வாகி, மனைவி தூக்கு போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

களியக்காவிளை, பிப்.2:  களியக்காவிளை அருகே மகனின் நினைவு தினத்தில் திமுக நிர்வாகி, தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் திட்டங்கனாவிளை பகுதியை சேர்ந்தவர் சகாயம் (60). திமுகவை சேர்ந்த இவர் தற்போது மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். இவரது மனைவி சுகந்தி (55). இவர்களது மகன் டிபுரோகிலின் (24) டாக்டருக்கு படித்து வந்தார். கடந்த ஆண்டு, பெங்களூரில் நடந்த விபத்தில் டிபுரோகிலின் உயிரிழந்தார். மகனின் இறப்புக்கு பின் சகாயம் மற்றும் சுகந்தி இருவரும் மனம் உடைந்தனர். குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த ஒரு விஷேச நிகழ்ச்சிகளிலும் கலந்து ெகாள்வதில்லை. வீட்டை விட்டு வெளியே வருவதையும் குறைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 30ம் தேதி மகனின் ஓர் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் மகனை நினைத்து சகாயமும், சுகந்தியும் கதறி அழுதனர். அவர்களுக்கு உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஆறுதல் கூறினர். இரவு வரை உடன் இருந்த உறவினர்களும், நண்பர்களும் சகாயமும், சுகந்தியும் தூங்க போவதாக கூறிய பின் புறப்பட்டு சென்றனர். உறவினர்கள் சென்ற பின், அன்றைய தினம் கதவை உள் பக்கமாக பூட்டி விட்டு சகாயமும், சுகந்தியும் உறங்க சென்றனர். ஆனால் மறுநாள் (31ம்தேதி) காலை இவர்கள் வீட்டு கதவு திறக்கப்பட வில்லை. வீட்டில் ஆள் நடமாட்டம் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. தினமும் இரவில் தனது வீட்டின் முன் பக்க மின் விளக்கை எரிய விடுவது, சகாயத்தின் வழக்கம் ஆகும். அந்த மின் விளக்கு விடிய, விடிய எரிந்து கொண்டு இருக்கும். ஆனால் 31ம் தேதி இரவு மின் விளக்கும் போடப்பட வில்லை.

நேற்று (1ம் தேதி) காலையிலும் வீட்டு கதவு திறக்கப்பட வில்லை. சகாயம், சுகந்தியின் செருப்புகள், பைக், உள்ளிட்டவை அப்படியே இருந்தன. வீட்டு வாசலும் சுத்தப்படுத்தப்படாமல் இருந்தது. வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டும் இருந்தது. இதனால் அருகில் வசிக்கும் சிலர், முஞ்சிறை ஒன்றிய திமுக செயலாளரும், குளப்புரம் ஊராட்சி தலைவருமான மனோன்மணிக்கு போன் மூலம் இந்த தகவல்களை கூறினர். இதனால் மனோன்மணி, சகாயத்தின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு சம்பவ இடத்துக்கு வந்தார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்க வில்லை. எனவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது வீட்டின் வரவேற்பறையில் சகாயமும், சுகந்தியும் அருகருகே தனித்தனி துணியால் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் உறவினர்கள் கதறி அழுதனர். களியக்காவிளை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சகாயம், சுகந்தியின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வீட்டில் ஏதாவது கடிதம் உள்ளதா? என சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த டேபிளில் 3 வரிகளில் ஒரு கடிதம் எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில் 30.1.2022 ம் தேதி குறிப்பிடப்பட்டு, எங்கள் மகனே இல்லை என்ற போது நாங்கள் யாருக்காக வாழ வேண்டும். எனவே நாங்களும் எங்கள் மகனுடன் செல்கிறோம். எங்களுடைய இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் முடிவை  நாங்களே தேடிக்ெகாண்டோம் என எழுதப்பட்டு இருந்தது. மகனுக்கு முதல் ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டித்து விட்டு உயிரிழக்க வேண்டும் என முடிவு செய்து, இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. சகாயம், மனைவியுடன் தற்கொலை செய்த தகவல் அறிந்ததும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். மகன் இறந்த நாளில் பெற்றோர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* 10 ஆண்டுகள் மாவட்ட கவுன்சிலர்
தற்கொலை செய்த சகாயம் திமுகவில் தீவிர விசுவாசியாக இருந்தவர். கடந்த 2001 முதல் 2011 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள்( முன்சிறை) 5 வது வார்டு சார்பில் மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். மகனின் இறப்புக்கு பின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த சகாயம், அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுங்கினார். யாராவது கட்சிக்காரர்கள் சந்திக்க சென்றால் கூட, இனி எனக்கு என்ன இருக்கிறது என விரக்தியில் தான் பேசி உள்ளார். உறவினர்களும், நண்பர்களும் அவ்வப்போது ஆறுதல் கூறி உள்ளனர். ஆனால் மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாத நிலையில் இந்த முடிவை தேடிக்கொண்டார்கள்.

Tags : Kaliyakkavilai ,DMK ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு