×

அமாவாசையை பவுர்ணமியாக்கி காட்டிய அபிராமி பட்டர் விழா

தரங்கம்பாடி, பிப்.2: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அபிராமி அந்தாதி படைத்த அபிராமி பட்டர் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் திருக்கடையூரில் வசித்து வந்த சுப்ரமணிய அய்யர் என்பவர் அபிராமி அம்மன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவரிடம் திருக்கடையூருக்கு வந்த, தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர், இன்று அமாவாசையா அல்லது பெளர்ணமியா என்று கேட்டார். அம்மனை வணங்கி கொண்டிருந்த அபிராமி பட்டர் தவறுதலாக அன்றைய தினம் அமாவாசையை, பெளர்ணமி என்று மாற்றி சொல்லி விட்டார். ஆனால் உண்மையில் அது அமாவாசை தினம். கடும் கோபம் கொண்ட மன்னர் அன்று சந்திரனை காட்டாவிட்டால் உன் தலை துண்டிக்கப்படும் என்று எச்சரித்தார். பயந்துபோன அபிராமி பட்டர் அபிராமி அம்மனை துதித்து 101 பாடல்கள் பாடத் துவங்கி, 79வது பாடலை பாடிகொண்டிருந்தபோதே அபிராமி அம்மன் தனது காதணியை வானத்தை நோக்கி வீச செய்தார். அது முழு நிலவு போல ஒளி வீச துவங்கியது. அதனை கண்ட சரபோஜி மன்னர் பிரமித்துப்போனார்.

அபிராமி பட்டருக்கு சன்மானம் வழங்க விரும்பி என்ன சன்மானம் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அபிராமி பட்டர் சன்மானம் பெற மறுத்துவிட்டார். அபிராமி அந்தாதி பாடியதால் அவருக்கு அபிராமி பட்டர் என்ற பெயர் வந்தது. அவர் பாடிய பாடல்கள் அபிராமி அந்தாதி எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. அபிராமி பட்டரை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் அமாவாசை தினத்தில் அபிராமி பட்டர் விழா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு அபிராமிபட்டர் விழா நடைபெற்றதையொட்டி விநாயகர், சுப்ரமணியசுவாமிக்கு மகாஅபிஷேகமும், அமிர்தகடேஷ்வர சுவாமி, அபிராமி அம்மனுக்கு ருத்ராபிஷேகம் நடைபெற்றது. இரவு அபிராமி அம்மன் சன்னதியில் குருமகா சன்னிதானமும், ஓதுவார்களும் அபிராமி அந்தாதி திருப்பாவைகளை பாட பாட ஒவ்வொரு பாட்டிற்கும் தீபாராதனை காட்டப்பட்டது. 79 வது பாடலை பாடும் போது அபிராமி அம்மன் அமாவாசையில் பவுர்ணமியை காட்டிய நிகழ்ச்சி காட்சி காட்டப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம், தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Abrami Butter Festival ,
× RELATED நண்பர் மீது ஆசிட்டை ஊற்றிய வெள்ளிப்பட்டறை தொழிலாளி