×

பேராவூரணி அரசு மருத்துவமனையில் அபூர்வ வகை புற்றுநோயால் பாதித்த தொழிலாளிக்கு அறுவை சிகிச்சை

பேராவூரணி, பிப்.1: பேராவூரணி அரசு மருத்துவமனையில் அபூர்வ வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயக் கூலித் தொழிலாளிக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து அரசு டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர். பேராவூரணி அருகே உள்ள ருத்திரசிந்தாமணி ஊராட்சி பழுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (70), விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக இடது காலில் ஆறாத புண் இருந்துள்ளது. மேலும், கால் மற்றும் இடுப்பு கீழ் பகுதியில் கடுமையான வலி இருந்துள்ளது. இதையடுத்து, அவர் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள், காயம் ஆறாத நிலையில், உடலில் உள்ள திசுவை (பயாப்ஸி) பரிசோதனைக்கு அனுப்பினர்.இதில், அவருக்கு வீரியம் மிக்க கரும்புற்று நோய் (MALIGNANT MELANOMA) தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வகை புற்றுநோயானது தோலில் ஏற்படும் புற்றுநோயாகும். மேலும், அரிதான இந்த புற்றுநோய், லட்சத்துக்கு ஒருவர் அல்லது 2 பேரை மட்டுமே பாதிக்கும் தன்மை வாய்ந்தது.

தொழிலாளி அருணாச்சலத்திற்கு கீழ்பாதத்தின் தோலில் ஏற்பட்டு, அவரது கால் முழுவதும் பரவி, இடுப்பு பகுதியில் ரத்த நாளங்களை சுற்றி உள்ள அனைத்து நிணநீர் முடிச்சுகள் வரை பரவி பெரும் வேதனையை அளித்துவந்துள்ளது. இவர்களது குடும்ப சூழ்நிலையை அறிந்த டாக்டர்கள் பேராவூரணி அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கில் போதிய வசதி இல்லாத நிலையிலும், சவாலாக எடுத்துக் கொண்டு தலைமை மருத்துவரும், அறுவை சிகிச்சை நிபுணருமான பாஸ்கர், அறுவை சிகிச்சை மருத்துவர் பிரசன்ன வெங்கடேசன், மயக்க மருந்து நிபுணர் தம்பு சுதாகர் மற்றும் புற்றுநோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மைக்கேல் ராஜீவ், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சவாலான அறுவை சிகிச்சையை சுமார் 5 மணி நேரம் போராடி வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதில் புற்றுநோய் கட்டி முழுமையாக அகற்றப்பட்டது.

 மேலும் தோலில் பரவிய திசுக்கள் நிணநீர் முடிச்சுகள் முழுவதும் அகற்றப்பட்டது. கட்டி அகற்றப்பட்ட காலுக்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் புதிய தோல் பொருத்தப்பட்டுள்ளது.தஞ்சையில் மருத்துவமனை நடத்தி வரும் புற்றுநோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் ராஜீவ் மைக்கேல், தனது சக டாக்டர்களுக்காக நட்பு அடிப்படையில், சேவை மனப்பான்மையுடன், எவ்வித ஊதியமும் பெறாமல் அறுவை சிகிச்சையில் முக்கியப் பங்கு வகித்தார். , தமிழகத்திலேயே முதன்முறையாக தாலுகா அளவிலான மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அருணாச்சலம் பூரண நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார். அருணாச்சலத்தை மருத்துவமனையில் சந்தித்து எம்எல்ஏ அசோக்குமார் ஆறுதல் கூறி, அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைப் பாராட்டினார்.

Tags : Peravurani Government Hospital ,
× RELATED  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...