×

நீட் தேர்வில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தேர்வான 34 அரசு பள்ளி மாணவர்களால் புதுகை மாவட்டத்திற்கு பெருமை

புதுக்கோட்டை, பிப்.1: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகியுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 34 அரசுப் பள்ளி மாணவர்களை மாவட்ட கலெக்டர் கவிதாராமு நேற்று வாழ்த்தி பாராட்டினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற 9 மாணவர்களும், 25 மாணவிகளும் என மொத்தம் 34 மாணவ, மாணவிகளில் 25 நபர் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கும், 9 நபர்கள் பல் மருத்துவப் படிப்பிற்கும் தேர்வாகியுள்ளனர். அவர்களை கலெக்டர் கவிதா ராமு பாராட்டினார் அப்போது அவர் பேசுகையில், புதுக்கோட்டையை சேர்ந்த 34 அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ளனர். இதன்மூலம் உங்கள் உழைப்பின் காரணமாக மாவட்ட நிர்வாகம் பெருமை கொள்கிறது.

இதற்கு காரணமான மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், மாணவர்கள் அனைவரும் தங்களது கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நெகிழ்திறன் என்ற தன்னம்பிக்கை பயிற்சி மாவட்ட மனநல மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் வருங்காலங்களிலும் இதுபோன்று சிறப்பான முறையில் செயல்பட்டு வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு வகையான சவால்களையும் எதிர்கொண்டு உங்களின் வெற்றி மற்றவர்களையும் வெற்றிப்பெற தூண்டும் வகையில் செயல்பட வேண்டுமென என்று கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, இலுப்பூர் ஆர்டிஓ தண்டாயுதபாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி மற்றும் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Pudukai ,
× RELATED புதுகை வம்பன் அருகே மனநலம் பாதித்த...