×

மாணவர்களின் கல்வி, ஆண்டு தேர்வை கருத்தில் கொண்டு ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள வணிக  மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், முதல்கட்டமாக கடந்த 24ம் தேதி அங்குள்ள 108 வணிக கட்டிடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 84 வணிக கட்டிட மின் இணைப்புகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 7 சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பள்ளி மாணவர்கள் தற்போது ஆன்லைன் மூலம் படித்து வருவதால், மின் இணைப்பை துண்டித்தால் மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படும். இந்த கல்வியாண்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் முடிவடையவுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30ம் தேதிவரை நீட்டிக்க வேண்டும் என்று  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது,  தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இதுவரை 152 கடைகளில் 107 கடைகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அனைத்து வணிக நிறுவனங்களின் இணைப்பு இன்று (நேற்று) மாலை 5 மணிக்குள் சீல் வைக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படும், என்றார்.

தொடர்ந்து, கூடுதல் அட்வகேட் ஜெனரல், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மேய்க்கால் புறம்போக்கு நிலத்துக்கு பதிலாக அரசு மாற்று இடம் வழங்கி உள்ளது. பெத்தேல் நகர் பகுதி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை குடியிருப்பு நிலமாக வகை மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தார். ஆனால் அந்த பரிந்துரை திருப்பி அனுப்பப்பட்டு விட்டது, என்றார்.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், பட்டா வழங்குவதற்கான ஆவணங்கள் தரப்பட்டுள்ளன. அதற்கான ஆய்வு மேற்கொள்ளாமல் கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டது விதிமீறலாகும், என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாணவர்களின் படிப்பு மற்றும் ஆண்டு தேர்வை கருத்தில் கொண்டு குடியிருப்பு கட்டிடங்களுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த கல்வியாண்டு முடியும் வரை அரசுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது.

அதேசமயம், வணிக நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர வேண்டும். அரசு கொள்கை அடிப்படையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக அப்பகுதியில் உள்ள உண்மை ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களை அரசு தலைமை வழக்கறிஞருக்கு 7 நாளில் மனுதாரர்கள், அப்பகுதி மக்கள் வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பு நிலங்களை வரன்முறை செய்ய அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Bethel ,Inchambakkam ,
× RELATED மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்...