×

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியை சேர்ந்தவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்று எம்பிபிஎஸ் சேர்ந்துள்ள மாணவிகள்


* அமைச்சர் எ.வ.வேலு வாழ்த்து
* தலா ₹50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்

திருவண்ணாமலை, பிப்.1: திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2 பேர், நீட் தேர்வில் தகுதிபெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஸ் சேர்ந்துள்ளனர். அதையொட்டி, மாணவிகளுக்கு தலா ₹50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி அமைச்சர் எ.வ.வேலு வாழ்த்துத் தெரிவித்தார். தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தற்போது நடந்து வருகிறது. அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை பெற்று பயனடைந்துள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 அரசு பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். அதோடு, 3 மாணவர்கள் சுயநிதி மருத்துவ கல்லூரிகளிலும், 8 மாணவர்கள் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்க்கை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வு எழுதிய 62 மாணவிகளில் 10 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், மாணவிகள் சத்யா நீட் தேர்வில் 311 மதிப்பெண்களும், வித்யா 289 மதிப்பெண்களும் பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர்க்கை பெற்றுள்ளனர். நகராட்சி அரசு பள்ளி மாணவி சத்யா, கடலூர் அரசு மருத்தவக் கல்லூரியிலும், மாணவி ஸ்ரீவித்யா சென்னை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியிலும் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர்.

மேலும், நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி வித்யாவுக்கு பெற்றோர்கள் இல்லை. எனவே, சிறு வயதில் இருந்தே கூலி தொழிலாளியான அவரது பெரியப்பா பத்மநாபன் பராமரிப்பில் இருந்து வருகிறார். அதேபோல், மாணவி சத்யாவின் பெற்றோர் குபேந்திரன், உமா ஆகியோர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடுமையான வறுமையின் சூழலிலும், அயராத உழைப்பின் மூலம் மாணவிகள் இருவரும் நீட் தேர்வில் தகுதி பெற்று எம்பிபிஎஸ் சேர்க்கை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், எம்பிபிஎஸ் சேர்க்கை பெற்ற மாணவிகள் சத்யா, வித்யா ஆகியோர், திருவண்ணாமலையில் நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு, மாணவிகள் இருவருக்கும் தலா ₹50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அப்போது, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.ேவ.கம்பன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் டிவிஎம் நேரு, எஸ்.பன்னீர்செல்வம், இரா.ஜீவானந்தம், அருணை வெங்கட், பிரியா விஜயரங்கன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Thiruvannamalai Municipal Girls' School ,MBBS ,
× RELATED நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப்...