×

பெரியபாளையம் அருகே விவசாய நிலத்தில் சிவலிங்கம் நந்தி சிலைகள் கண்டெடுப்பு: பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு

ஊத்துக்கோட்டை: ஆத்துப்பாக்கம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம், நந்தி சிலைகளுக்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிப்பட்டனர். பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை(48). விவசாயி. நேற்று பிற்பகல் இவர் நிலத்திற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் முட்புதர்கள் இருந்தது. இதை அவர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கல்லால் ஆன முகம் சேதமடைந்த நிலையில் நந்தி சிலை கிடந்தது. பின்னர், அதன் அருகில் உள்ள முட்புதர்களை அகற்றியபோது மீண்டும் பொக்லைன் இயந்திரத்தில் ஏதோ தட்டுப்பட்டது.

உடனே கையால் மண்வெட்டி எடுத்து 6 அடி ஆழத்திற்கு தோண்டியபோது, கல்லால் ஆன 3 அடி உயர சிவலிங்கம் சிலை பீடத்துடன் இருந்ததை கண்டெடுத்தார். இதையறிந்த, அப்பகுதி மக்கள் சிவலிங்கத்திற்கும், நந்திக்கும் பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும், இதன் அருகில் பூமியில் சிதிலமடைந்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம், செங்கற்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசாருக்கும், ஊத்துக்கோட்டை வருவாய் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் ஞானசவுந்தரி, விஏஒ குணசீலன், கிராம உதவியாளர் அருள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் புஷ்பா முருகன் ஆகியோர் சென்று சிவலிங்கத்தையும், நந்தியையும் மீட்டனர். தொடர்ந்து, ஊத்துக்கோட்டை கருவூலத்தில் ஒப்படைக்க வருவாய் துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் அதே இடத்தில் சிவனுக்கு கோயில் கட்டுவதாக கூறியுள்ளனர். சிலைகளை கோயில் கட்ட கொடுப்பார்களா அல்லது கருவூலத்தில் ஒப்படைப்பார்களா என்பது தெரியவில்லை. இதனால், ஆத்துப்பாக்கம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags : Shivalingam ,Nandi ,Periyapalayam ,
× RELATED மாரியம்மன் தரிசனம்