தாய் இறந்த 3 மாதத்தில் கார் மோதி சிறுவன் பலி: உத்திரமேரூர் அருகே சோகம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே தாய் இறந்த 3 மாதத்தில், சிறுவன் வாகன விபத்தில் பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உத்திரமேரூர் அடுத்த ராவத்தநல்லூரை சேர்ந்தவர் மாரி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனா. இவர்களது மகன் அஸ்வித் (11). களியாம்பூண்டி அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 3 மாதங்களுக்கு முன் மீனா, உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து மாரி, மகனுடன் வசித்தார். இந்நிலையில், நேற்று மாலை சிறுவன் அஸ்வத், காரணி மண்டபத்தில் உள்ள கடைக்கு சைக்கிளில் புறப்பபட்டான்.

அப்பாது, தனியார் கம்பெனிக்கு சொந்தமான சோதனை ஓட்ட கார், வந்தவாசியில் இருந்து உத்திரமேரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. காரணிமண்டபம் அருகே கார் வந்தபோது, திடீரென ஒரு நாய் சாலையின் குறுக்கே ஓடியது. இதனால் டிரைவர், நாய் மீது மோதாமல் இருக்க காரை திருப்பினார். அந்த நேரத்தில், அங்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த அஸ்வித் மீது கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் அஸ்வித், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

இதை பார்த்ததும், காரை அங்கேயே நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பிவிட்டார். தகவலறிந்து பெருநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார், காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். தாய் இறந்த 3 மாதத்தில், மகன் வாகன விபத்தில் இறந்த சம்பவம்,  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: