×

கேளம்பாக்கத்தில் கடத்தப்பட்ட ஒருமாத ஆண் குழந்தை 3 மணிநேரத்தில் மீட்பு

சென்னை: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஹேமந்த்குமார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 24ம் தேதி ஹேமந்த்குமார், வேலை தேடி சென்னைக்கு குடும்பத்துடன் வந்தார். சென்னைப் புறநகர் பகுதிகளில் வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தவரை தேடி ஹேமந்த்குமார் சென்றார். லட்சுமி, 3 குழந்தைகளுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய காத்திருப்பு அறையில் தங்கி, அங்கு வரும் பயணிகள் தரும் உணவை சாப்பிட்டனர்.
29ம் தேதி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், லட்சுமியிடம் பேச்சு கொடுத்து, கேளம்பாக்கத்தில் கட்டிட வேலை இருப்பதாக கூறினார்.

இதுபற்றி லட்சுமி, கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஹேமந்த்குமார், குடும்பத்துடன் கேளம்பாக்கம் அருகே செங்கண்மால் பகுதியில் வடமாநில கட்டிடத் தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிக்கு சென்றார். கடந்த 2 நாட்களாக அங்கிருந்த ஒரு குடியிருப்பில் தங்கினார். நேற்று காலை 8 மணியளவில் எழுந்தபோது, அவர்களது 1 மாத ஆண் குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, கேளம்பாக்கம் போலீசில், அவர்கள் காலை 10 மணியளவில் புகார் அளித்தனர். விசாரணையில், லட்சுமிக்கு வேலை இருப்பதாக கூறிய பெண், குழந்தையை தூக்கி சென்றதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். இதையடுத்து தாம்பரம் கமிஷனர் ரவி உத்தரவின்படி, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், கர்நாடக பெண்ணின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது, அவர் சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக செல்வது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று பெங்களூரு ரயில் செல்லும் நடைமேடையில் காத்திருந்த இளம்பெண், அவரது கணவரை கைது செய்தனர். விசாரணையில், கோமளா (28), அவரது கணவர் மஞ்சுநாத் (34) என தெரிந்தது. அவர்களிடம் இருந்து 1 மாத ஆண் குழந்தையும் மீட்டுமு, பெற்றோரிடம் தாம்பரம் கமிஷனர் ரவி ஒப்படைத்தார். 3 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

Tags : Kalambakkam ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து முனைய...