×

கொள்ளிடம் அருகே வடரங்கம்

கொள்ளிடம், ஜன.31: கொள்ளிடம் அருகே வடரங்கம் ரங்கநாதபெருமாள் கோயில் நிலங்களுக்கான 30 வருட குத்தகை பாக்கியை பிப்ரவரி மாதத்திற்குள் செலுத்தவேண்டும் என்று விவசாயிகளுக்கு அதிகாரிகள் காலக்கெடு விதித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வடரங்கம் ரங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலுக்கு 240 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை வடரங்கம் மற்றும் வடரங்கம் அருகே உள்ள சென்னியநல்லூர்,குன்னம்,ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 விவசாயிகள் குத்தகைக்கு பயிர் செய்து வருகின்றனர். கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் நிலங்களை குத்தகைக்கு பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் கடந்த 30 வருடங்களாக விவசாயிகள் அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட குத்தகையை செலுத்தவில்லை. அவ்வப்போது ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயிகள் குத்தகை பாக்கியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இந்துசமய அறநிலையத்துறையை சேர்ந்த செயல் அலுவலர் பொன் முத்துராமன்,கணக்கர் சிவசங்கர் மற்றும் ஊழியர்கள் வடரங்கம் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சுமித்ரா சின்னதுரை,கவுன்சிலர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் விவசாயிகள் ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில் வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் 30 வருட குத்தகை பாக்கியை கட்டாயமாக செலுத்த வேண்டும். செலுத்த தவறினால் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் ரங்கநாத பெருமாள் கோயிலை சுற்றி 5 ஏக்கர் பரப்பளவில் 100 வீடுகளைச் சேர்ந்த குடும்பங்களில் வசிப்பவர்களும் வீட்டு வாடகை பாக்கி செலுத்த தவறினால் அவர்களும் இடத்தை காலி செய்து விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

அதிகாரிகளின் கருத்துக்கு பதிலளித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த 30 வருட குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் இந்த வருடத்திற்கான குத்தகை பாக்கியை மட்டும் அறுவடைக்குப்பின் விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த வருடங்களில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யும் போது கடும் வரட்சி மற்றும் மழை வெள்ளம் ஆகிய இயற்கை சீற்றத்தால் பல இழப்புகளை சந்தித்து நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே அரசு இந்த வருடத்திற்கான குத்தகை பாக்கி தொகையை மட்டும் பெற்றுக் கொள்ள இசைவு தெரிவிக்க நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

Tags : Vadarangam ,Kollidam ,
× RELATED கொள்ளிடம் அருகே கடைவீதியில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது