(தி.மலை) விவசாயிகள் டிஏபி உரத்திற்கு பதில் சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்தலாம் வேளாண் இணை இயக்குநர் தகவல்

திருவண்ணாமலை, ஜன.31: விவசாயிகள் டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தினை அடியுரமான பயன்படுத்தலாம் என வேளாண் இணை இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து வேளாண் இணை இயக்குநர் முருகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகளவில் நெல், மணிலா பயிர் செய்து வருகின்றனர். விவசாயிகள் டிஏபி உரத்திற்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தலாம். இந்த உரம் எளிதில் கரையும் பாஸ்பேட் ஊட்டம், இரண்டாம்நிலை ஊட்டமான கந்தகம் மற்றும் கால்சியம் பிரதானமாக உள்ளதால் எண்ணெய்வித்து பயிர்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.

சூப்பர் பாஸ்பேட் உரத்தில் மணிச்சத்து 16 சதவீதம் , இரண்டாம் நிலை சத்தான கந்தகம் 11 சதவீதமும் மற்றும் கால்சியம் 21 சதவீதமும் உள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் சூப்பர் பாஸ்பேட் உரம் டிஏபி உரத்தை விட குறைந்த விலையில் அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் எளிதில் கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் சூப்பர் பாஸ்பேட் உரத்தை வாங்கி பயன்படுத்தலாம். இதில் மணிச்சத்து நீரில் எளிதில் கரையும் தன்மையும், வேர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. சூப்பர் பாஸ்பேட் உரத்தினை ெநற்பயிர் ஏக்கர் ஒன்றிற்கு 125 கிலோ என்ற அளவிலும், மணிலா பயிருக்கு 87 கிலோ என்ற அளவிலும், எள் பயிருக்கு 56 கிலோ என்ற அளவிலும், தென்னை மரம் ஒன்றுக்கு 200 கிராம் என்ற அளவிலும் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: