×

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஆவணமின்றி பணம், பரிசு பொருட்கள் கொண்டு சென்றதாக இதுவரை 2 வழக்குகள் பதிவு பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை

திருவண்ணாமலை, ஜன.31: திருவண்ணாமலை மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கும் பணியில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பணம், பரிசு பொருட்கள் கொண்டுசென்றதாக இதுவரை 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, கடந்த 28ம் தேதியில் இருந்து வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. மனுதாக்கல் செய்ய வரும் 4ம் தேதி கடைசி நாளாகும். எனவே, அரசியல் கட்சியினர் தங்களுடைய வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விதிமீறல்களை கண்காணிக்கும் பணியில் 42 பறக்கும் படையினர் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடைபெறும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளின் முக்கிய சாலை சந்திப்புகளில் தடுப்பு வேலிகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் நடைபெறும் நகர்ப்புற பகுதிகளுக்கு செல்லும் கார், வேன் போன்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி, சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் ₹50 ஆயிரத்துக்கு அதிமாகன பணம் மற்றும் ரசீதுகள் இல்லாமல் கொண்டுசெல்லப்படும் பரிசு பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை ஆரணியில் அனுமதியில் இன்றி பைக்கில் கொண்டுசென்ற 140 காமாட்சியம்மன் விளக்குகள் மற்றும் போளூர் பேரூராட்சியில் ஆவணமின்றி கொண்டுசென்ற ₹1.50 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக, தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வேட்புமனுதாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு பண நடமாட்டம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் அதிகரிக்கும் என்பதால், பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

Tags : Flying Troops ,
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...