×

செய்யாறில் பறக்கும்படை சோதனை ஆடு வியாபாரியிடம் ₹59 ஆயிரம் பறிமுதல் ஆவணங்கள் காண்பித்ததால் திரும்ப ஒப்படைப்பு

செய்யாறு, ஜன.31: செய்யாறில் நடந்த சோதனையில் ஆடு வியாபாரி ஆவணமின்றி எடுத்துச்சென்ற ₹59 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நகரின் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று செய்யாறு வட்ட துணை தாசில்தார் தேவி தலைமையில் எஸ்ஐ தியாகச்செம்மல், போலீஸ்காரர் மாலதி ஆகியோர் கொண்ட பறக்கும்படை குழுவினர், காஞ்சிபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காலை 8.30 மணியளவில் அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர் ₹59,300 வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் தவசி கிராமத்தை சேர்ந்த ஆடு வியாபாரி மணி என்பதும், சிறுவேளியநல்லூர் கிராமத்தில் ஆடுகளை வாங்கியதற்கான பணத்தை கொடுக்க கொண்டு செல்வதும் தெரியவந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் ₹59,300ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை நகராட்சி தேர்தல் அலுவலர் ரகுராமனிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து மணி காலை 11.30 மணியளவில் நகையை அடகு வைத்து பணம் கொண்டு சென்றதற்கான ஆவணத்தை அதிகாரிகளிடம் காண்பித்தார். இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் பறிமுதல் செய்த ₹59.300ஐ ஒப்படைத்தனர்.

Tags : Flying Squadron Goat Dealer ,
× RELATED கோடை கால இயற்கை சுற்றுலா * 100 மாணவ –...