×

தொடர் போராட்டத்திற்கு பின் பணியிலிருந்த மின் ஊழியரை தாக்கியவர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் மின் பிரிவு அலுவலகத்தில் கணக்கீட்டு அலுவலராக முத்துராமன் என்பவர் பணி செய்து வருகின்றார். இவர் கடந்த 8ம் தேதி கோவளம் அடுத்த பேரூர் பிள்ளையார் கோயில் தெருவில் லோகமுத்து என்பவர் வீட்டில் கணக்கீடு பணி செய்யும்போது லோகமுத்து மின் கட்டணத்தை குறைவாக பதிவு செய்திடுமாறு வலியுறுத்தியுள்ளார். இதற்கு முத்துராமன் மறுப்பு தெரிவித்த நிலையில் லோகமுத்து மற்றும் அவரது உறவினர்கள் இருவர் முத்துராமனை தகாத வார்த்தையில் திட்டியதுடன் அருகில் இருந்த கட்டையை எடுத்து முத்துராமனின் தலையில் தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த முத்துராமன் தற்போது செங்கல்பட்டு அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதே போன்று, கருங்குழி மின் பிரிவு ஊழியர் லோகேஸ்வரன் பணியிலிருந்தபோது தாக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யாத காவல் துறையை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத மின்வாரிய உயர் அதிகாரிகளை கண்டித்தும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். மேலும், வருகின்ற செவ்வாயன்று மின் ஊழியர்களை தாக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்திட, வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் செங்கல்பட்டு திட்டத் தலைவர் என்.பால்ராஜ், பொறியாளர் பிரிவு செயலாளர் மயில்வாகனன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சுபாரதிஅண்ணா, மாநிலக்குழு உறுப்பினர் இ.சங்கர் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து மின் ஊழியரை தாக்கிய லோகமூரத்தியை கைது செய்திருப்பதாக, அவர் தெரிவித்தார். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...