ஸ்ரீமுஷ்ணம், ஜன. 29: ஸ்ரீமுஷ்ணம் அருகே வீட்டின் கதவை உடைத்து பெண்ணிடம் 4 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர். தடுத்த மகன் இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டார். ஸ்ரீமுஷ்ணம் அருகே குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரேமா (52). இவரது கணவர் விருத்தகிரி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு சக்திவேல் (22) என்கிற மகன் உள்ளார். அவருடன் பிரேமா வசித்து வருகிறார். இவர் வீட்டின் முன்புறம் கடைவைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மகனுடன் வீட்டில் பிரேமா தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் முன்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது.
உடனே பிரேமா எழுந்து கதவை திறந்து பார்த்த போது இரண்டு மர்மநபர்கள் வெளியே நின்றிருந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரேமா அணிந்திருந்த நான்கு பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முற்பட்ட போது பிரேமா கையை பிடித்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அவரது மகன் சக்திவேல் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தாக்க முற்பட்ட போது கொள்ளையர்கள் கையில் வைத்திருந்த கத்தி மற்றும் இரும்பு ராடு ஆகியவற்றை கொண்டு சக்திவேலை தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு சங்கிலியை பறித்துக்கொண்டு மாயமாகி விட்டனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த சக்திவேலை முஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இவரது வீட்டின் அருகே உள்ள தனியார் நெல்விதை விற்பனை நிலைய முன்பக்க கதவு இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு கொள்ளையர்கள் பதுங்கியிருந்துள்ளனர் என தெரிகிறது. இதுகுறித்து பிரேமா ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி, உதவி ஆய்வாளர் சுபிக்ஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டு விடப்பட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர் தர் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். மேலும் தப்பியோடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
