×

ஊராட்சி மன்ற தலைவருக்கு மிரட்டல் சிவகாசி தாலுகா அலுவலகம் முற்றுகை

சிவகாசி, ஜன. 29: செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிமன்ற தலைவருக்கு மிரட்டல் விடுத்த அதிகாரிகளை கண்டித்து சிவகாசி தாலுகா அலுவலகம் நேற்று முற்றுகையிடப்பட்டது. சிவகாசி ஒன்றியம் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் ரெங்கபாஷ்யம் நகர், திருப்பதி நகர், கங்காகுளம் பகுதியில் வாறுகால், சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரெங்கபாஷ்யம் நகரில் வாறுகால் அமைக்கும் பணிகளுக்காக அந்த பகுதியில் ஜேசிபி உதவியுடன் மண் தோண்டப்பட்டது. அந்த மண்ணை டிராக்டர் மூலம் அருகில் உள்ள கங்காகுளம் பகுதியில் நடைபெறும் மற்றொரு பணிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அப்போது அந்த வழியாக வந்த திருத்தங்கல் வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியபிரபாகர் அனுமதியின்றி மண் எடுத்து செல்வதாக கூறி டிராக்டரை பறிமுதல் செய்தார். ஊராட்சி பணிகள் குறித்து வருவாய்த்துறையினரிடம் யூனியன் ஆணையாளர்கள் எடுத்து கூறியும் டிராக்டரை விடுவிக்க மறுத்து விட்டனர். சம்பவ இடத்திற்கு துணைவட்டாட்சியர் லட்சம், செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக ஆதரவாளருமான கருப்பசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.

அப்போது வருவாய்துறையினருக்கும், கருப்பசாமி ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை காலிசெய்து விடுவேன் என்று துணை வட்டாட்சியர் மிரட்டல் விடுத்தாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி ஆதரவாளர்கள், சிவகாசி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்டிஓவிடம் மனுக்கொடுக்கப்பட்டது. இதனால் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sivakasi taluka ,
× RELATED சிவகாசி தாலுகா அலுவலகத்தில்...