×

“பயோ மைனிங்” மையத்தால் சுகாதார சீர்கேடு: மாநகராட்சி வாகனங்களை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

ஈரோடு,ஜன.29: ஈரோடு அருகே பயோ மைனிங் மையத்தினால் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாக கூறி மாநகராட்சி குப்பை வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள், லாரிகள் மூலம் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பயோ மைனிங் சென்டர்கள் எனப்படும் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவாநகரில் உள்ள பயோ மைனிங் மையத்திற்கு 49 வது வார்டில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. குடியிருப்பு பகுதிகள் அருகில் பயோ மைனிங் சென்டர் செயல்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சக்தி நகா, பெரியார் நகர், சூரம்பட்டிவலசு உள்ளிட்ட வெளி பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் ஜீவாநகர் பயோ மைனிங் சென்டருக்கு லாரிகள் மூலம் குப்பைகள் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுவதால் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாகவும், குறிப்பாக ஈ, கொசு தொல்லை அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி வந்த பொதுமக்கள் நேற்று காலை பயோ மைனிங் சென்டரை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும், வெளியிடங்களில் இருந்து குப்பைகள் ஏற்றி வருவதை கண்டித்தும் மாநகராட்சி வாகனங்களை ஜீவா நகர் பகுதியில் தடுத்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் வெளியிடங்களில் இருந்து குப்பைகள் இனி கொண்டு வரப்பட மாட்டாது என்று கூறியதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Tags : Bio Mining Center ,
× RELATED கள் விற்பனைக்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்