பழநி-கொடைக்கானல் சாலையில் உலா வரும் ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் பீதி

பழநி: பழநி-கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதியில் உலா வரும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.  பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவு உள்ளன. இந்த யானைகள் அடிக்கடி வனப்பகுதி எல்லைகளில் உள்ள குதிரையாறு, பாப்பம்பட்டி, காவலப்பட்டி, பொந்துப்புளி, சண்முகம்பாறை, பொருந்தல், தேக்கந்தோட்டம், சட்டப்பாறை, வரதாபட்டிணம், கோம்பைபட்டி மற்றும் சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குள் நுழைந்து அங்கு விளைவிக்கப்பட்டிருக்கும் பயிர் வகைகளை நாசம் செய்து வருகின்றன. இதனைத் தடுக்க வனத்துறையினர் அகழி அமைத்தல், சோலார் மின்வேலி அமைத்தல், பட்டாசு வெடித்தல், அதிக ஒளிச்செறிவு கொண்ட விளக்குகளை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலன் ஏதுமில்லை.

இதுவரை யானை தாக்கி இப்பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகி உள்ளன. தொடர் மழையால் பழநி வனப்பகுதி பசுமை அடைந்திருந்தன. இதனால் கடந்த சில வாரங்களாக யானைகள் விளைநிலங்களுக்குள் வருவது வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பழநி-கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதியில் சாலையில் உலா வரும் ஒற்றை யானையால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் வனப்பகுதி எல்லைகளில் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு ஊருக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: