×

பண்ருட்டி அருகே பயங்கரம் 4வயது சிறுவன் கழுத்தை நெரித்து கொலை இளம்பெண் அதிரடி கைது

பண்ருட்டி, ஜன. 28:      பண்ருட்டி அருகே 4வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நரபலி கொடுக்கப்பட்டதா அல்லது பாலியல் தொல்லையா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மருங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன்(40), கார் டிரைவர். இவரது மகன் அஸ்வின்(4). இவன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தான். சற்று நேரம் கழித்து அவரது தாயார் வந்து பார்த்த போது மகனை காணவில்லை.அஸ்வின் காணாமல் போனது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை. இதனையடுத்து முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத்தில் சிறுவனின் தந்தை செந்தில்நாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். நீண்டநேரம் போலீசார் தேடியும் கிடைக்கவில்லை.  

இதையடுத்து, சிறுவனை உடனே கண்டுபிடித்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி சபியுல்லா சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தார். இதையடுத்து, முத்தாண்டிக்குப்பம் காவல் ஆய்வாளர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான குழுவினர் விடிய, விடிய முந்திரி தோப்புகளில் சிறுவனை தேடினர். அப்போது, ஒரு முந்திரி தோப்பில் ரத்தகாயங்களுடன் அஸ்வின் இறந்த நிலையில் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுவனை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் காட்டிய போது இறந்தது அஸ்வின்தான் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் அஸ்வின் இறப்பு குறித்து, கீழக்கொல்லை கிராமத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அதே ஊரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சிறுவனை அழைத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே ஆத்திரத்தில் இருந்த சிறுவனின் குடும்பத்தினர் இளம்பெண் வீட்டிற்கு சென்று கற்களை வீசி தாக்கினர். அங்கு சென்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே சிறுவனை கொலை செய்ததாக கூறப்படும் பெண்ணை உடனே கைது செய்ய வேண்டும் என கூறி, சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் ஏராளமான போலீசார் பேச்சுவார்தை நடத்தினர்.

அதில், உரிய விசாரணை நடத்தி விரைவில் இளம்பெண்ணை கைது செய்வோம் என கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இதுகுறித்து சிறுவனின் தாயார் தனலட்சுமி கூறுகையில், எங்கள் வீடு, இளம்பெண் வீடு அருகருகே உள்ளது. இரு வீட்டாருக்கும் முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக எனது மகனை  கொலை செய்துவிட்டார். அவரை கைது செய்ய வேண்டும் என கூறினார்.  இதனிடையே சிறுவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளம்பெண் அதே ஊரை சேர்ந்த முருகவேல் மகள் ரஞ்சிதா (23) என தெரியவந்தது.     

அடிக்கடி வீட்டிற்கு வந்ததால் கொன்றேன்: பெண் வாக்குமூலம்  
போலீசாரிடம் பெண் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: என் வீட்டிற்கும் பக்கத்து வீட்டில் உள்ள செந்தில்நாதனுக்கும் இடம் பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் நாங்கள் யாருமே அவரது வீட்டிற்கு செல்ல மாட்டோம். சிறுவன் அஸ்வின் மட்டும் அடிக்கடி எனது வீட்டிற்கு வருவான். நான் திட்டி அனுப்பி விடுவேன். ஒரு சில நேரங்களில் மிட்டாய், கொய்யா பழம் கொடுத்து விட்டு இந்த பக்கம் வரக்கூடாது என எச்சரித்து அனுப்புவேன். சம்பவத்ன்று மீண்டும் என் வீட்டிற்கு சிறுவன் அஸ்வின் வந்தான். எனக்கு கோவம் வந்தது. இங்கு வரக்கூடாது போ என்றேன். ஆனால், சிறுவன் கேட்கவில்லை. இதனால், ஆத்திரத்தில் கையால் சிறுவனை தாக்கினேன். இதில், சிறுவன் மயங்கி விழுந்தான். அப்போதும் ஆத்திரம் அடங்காததால் கழுத்தை இறுக்கி விட்டு தள்ளிவிட்டேன். யாரும் வந்து விட்டால் மாட்டிக்கொள்வோம் என நினைத்தேன். உடனே அருகில் உள்ள முந்திரி தோப்பிற்கு கொண்டு சென்று தண்ணீர் தெளித்து பார்த்தேன், சிறுவன் எழுந்திருக்கவில்லை. இதனால் நான் பரிசோதித்து பார்த்தேன் அதில், சிறுவன் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனின் சடலத்தை அங்கேயே போட்டு விட்டு வந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

Tags : Panruti ,
× RELATED ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறிய பாமக