×

இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ள ராணி மங்கம்மாள் சத்திரம் பொலிவுபெறுமா? கொடும்பாளூர் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு


விராலிமலை, ஜன.28: இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ள ராணி மங்கம்மாள் சத்திரம் புதுப்பிக்கப்பட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கொடும்பாளூர் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவாள் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ராணி மங்கம்மாள் சத்திரம் அதன் கம்பீரத்தை இழந்து காட்சியளிக்கிறது. புதுப்பித்து பொலிவேற்றினால் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும் வரலாற்றை அறிந்து கொள்ளமுடியும். புதுப்பிக்கப்படுமா என்ற ஆவலோடு காத்திருக்கும் கொடும்பாளூர் பகுதி மக்கள். விராலிமலை-மதுரை சாலையில் இருக்கும் கொடும்பாளூர் சத்திரத்தில் உள்ளது இந்த ராணி மங்கம்மாள் சத்திரம். 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சத்திரம் சமீப காலமாக அதன் ஸ்த்ரத்தன்மையை இழந்து பூச்சுக்கள் உதிர்ந்து விழுந்து வருவது என்பது அப்பகுதி மக்களையும், தொல்லியல் ஆர்வலர்களையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

1659 ஆண்டுகளில் மதுரையை ஆண்ட மன்னரான சொக்கநாத நாயக்கரின் மனைவி ராணி மங்கம்மாள். இவர் தனது கணவர் சொக்கநாத நாயக்கரின் மறைவுக்கு பிறகு தனது மகனான மூன்று மாத குழந்தையான அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு முடிசூட்டிய மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பின் காப்பாளராக ஆட்சியை நடத்தி வந்துள்ளார். மதுரையை தலைநகராக கொண்டு ஆண்டபோதும் ராணி மங்கம்மாளின் ஆளுமையின் வடக்கு பகுதி திருச்சி மண்டலம் வரை அப்போது நீண்டிருந்துள்ளது.

இந்த நிலையில் மதுரையில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து மதுரைக்கும் சென்று வரும் வழிப்போக்கர்கள் இடையில் தங்கி உணவருந்தி ஓய்வெடுப்பதற்காக விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூரில் கட்டப்பட்டதுதான் இந்த ராணி மங்கம்மாள் சத்திரம். அதற்கு பின்னர் தான் கொடும்பாளூர் என்ற ஊர் கொடும்பாளூர் சத்திரமாக மாறியுள்ளது. பல்வேறு வேலைபாடுகளுடன் கூடிய கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த சத்திரத்தின் உள்ளே சென்று பார்ப்பவர்களை பிரமிப்புக்குள்ளாக்குகிறது. அரண்மனைகளில் உள்ளது போன்று உள்பகுதி தூண்கள் அமைக்கப்பட்டு, அதன் நடுவே கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டான கலைநயத்துடன் தூண்கள், வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கால கட்டிட கலைஞர்களின் கலை நயத்தை இவ்வேலைபாடுகள் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மன்னர் ஆட்சி மறைந்து மக்களாட்சி தொடங்கிய காலகட்டத்தில் ராணி மங்கம்மாள் சத்திரம் கல்வி கூடமாக மாற்றப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அங்கு நடுநிலை பள்ளி இயங்கி வந்துள்ளது. கால போக்கில் புதிய பள்ளி வகுப்பறைகள் சத்திரத்தின் அருகே கட்டப்பட்டதால் சத்திரத்தில் இயங்கி வந்த பள்ளி மாற்றப்பட்டு சத்திரம் பூட்டிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக பராமறிப்பின்றி பூட்டியே கிடப்பதால் மழை, வெயில் உள்ளிட்ட பருநிலை மாற்றத்தினால் கட்டிடம் சேதமடைந்து பூச்சுகள் பெயர்ந்து சிதிலமடைந்து வருகிறது. கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த ராணி மங்கம்மாள் சத்திரத்தை மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு மராமத்து பணிகள் தொடங்கி கட்டிடத்தை பராமரிக்க வேண்டும் என்றும். இதனால் வருங்கால சந்ததியினர் வரலாற்றை அறிந்து கொள்ளமுடியும் என்பது வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Rani Mangammal Chatram ,Kodumbaloor ,
× RELATED விராலிமலை அருகே 15 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய கொடும்பாளூர் பெரியகுளம்