×

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

திருப்பூர்:  திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கலெக்டர் வினீத் தலைமையில் உறுதி மொழி ஏற்றனர். 12-வது தேசிய வாக்காளர் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அனைவரையும் உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் பங்கேற்கத்தக்க தேர்தலை உருவாக்குவோம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை கொண்டாட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் காட்சிப்படுத்தியுள்ளது.

மேலும், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் நேற்று தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கவும், இளம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில், அரசு அலுவலர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு வட்டங்களை சேர்ந்த இளம் வாக்காளர்களுக்கு கலெக்டர் வினீத் அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் அம்மாபாளையம்  ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10-ம் வகுப்பு மாணவர்களான சூர்யா பகவதி, விநாயக் ஸ்ரீராம் ஆகியோருக்கு கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ், தேர்தல் தாசில்தார் முருகதாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Day ,Tirupur Collector's Office ,
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...