விவசாயிகளின் காவலனாக முதல்வர் உள்ளார் பால்வளத்துறை அமைச்சர் பேச்சு

காரைக்குடி: காரைக்குடி ஆவின் பாலக குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்து, புதிய இயந்திரம் துவக்கவிழா மற்றும் பால் கூட்டுறவு சங்க உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. பொதுமேலாளர் ராஜசேகர் வரவேற்றார். நிர்வாக ஆணையர் பிரகாஷ் தலைமை வகித்தார். பால்வள ஆணையர் சுப்பையா திட்டங்கள் குறித்து விளக்கினார். கலெக்டர் மதுசூதன்ரெட்டி முன்னிலை வகித்தார். எம்எல்ஏ மாங்குடி வாழ்த்துரை வழங்கினார். பாலகத்தை ஆய்வு செய்து, இயந்திரத்தை துவக்கி வைத்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பேசுகையில்,

‘‘விவசாயிகளின் தேவைகளை உணர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். விவசாயத்தை யொட்டிவரும் தொழில் பால்வளம். இத்துறையை மேம்படுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதுக்கு இணங்க தமிழகம் முழுவதும் 25 பால்குளிரூட்டும் நிலையங்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது உற்பத்தி பெருகி தினமும் 41 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்திலும் மற்றும் கடும் மழையிலும் மக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது உற்பத்தியாளர்களுக்கு கேசிசி கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் காவலனாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார் இப்பாலகத்தில் வரும் காலத்தில் தினமும் ஒரு லட்சம் லிட்டர் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக்க முதல்வர் முனைப்புடன் செயல்படுகிறார். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 30 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்க உள்ளோம். இலக்கு நிர்ணயம் செய்து அதற்கு மேல் செயல்பட்டு வருகிறோம். இப்பகுதியில் குடிசைமாற்று வாரியம் மூலம் 130 கோடிக்கு மேல் 900 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. இம்மையத்தில் புதிய யூனிட் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன், திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சேங்கைமாறன், மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார், நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை,   ஒன்றிய செயலாளர்கள் சின்னத்துரை, டாக்டர் ஆனந்த், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: