கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு விரைவில் சாலை வசதி ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தகவல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் மலைகிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும் என, ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தெரிவித்தார். கொடைக்கானலில் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கொடைக்கானல் ஆர்டிஓ முருகேசன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி முன்னிலை வகித்தார். விழாவில்  132 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. 64 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் 20 முதியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை ஆகிய அரசு நலத்திட்டங்களை பழநி தொகுதி எம்எல்ஏ. ஐ.பி.செந்தில்குமார் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், ‘‘கொடைக்கானல் மலைப்பகுதியில் வெள்ள கெவி, சின்னூர், பெரியூர், கருவேலம் பட்டி உள்ளிட்ட மலை கிராம பகுதிகள் சாலை வசதி இல்லாமல் உள்ளன. இந்த பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்தப்படும். கொடைக்கானல் பகுதிக்கு மட்டும் கடந்த 7 மாதங்களில் சுமார் 50 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் கொடைக்கானல் ஏரி மேம்பாட்டு திட்டமும் அடங்கும். இன்னும் அதிக அளவிலான திட்டங்கள் கொண்டு வரப்படும்’’ என்றார்.

 விழாவில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுவேதாராணி கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா, கொடைக்கானல் தாசில்தார் முத்துராமன், சமூகநலத்துறை தாசில்தார் சந்திரன், கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராகிம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, கீழ்மலை ஒன்றிய செயலாளர் கருமலை பாண்டியன், மாவட்ட பிரதிநிதி சுரேஷ் பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: