விராலிமலை பேருந்து நிலையத்துக்கு மொழிப்போர் தியாகி சண்முகம் பெயர் சூட்டப்படுமா?

விராலிமலை, ஜன.25: விராலிமலையில் ரூ.3.18 கோடியில் கட்டப்பட்டு இயங்கி வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு மொழிப்போர் தியாகி விராலிமலை சண்முகம் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழிக்கு என்று பல்வேறு வரலாறுகள் உள்ளன. உலகிலேயே மொழிக்காக உயிர்நீத்த வரலாறு உண்டு என்றால் அது தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் 1937ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று இருப்பினும் 1965ம் ஆண்டில் நடந்த மிகப்பெரிய போராட்டம் தான் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. எனவே அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக தமிழக அரசால் கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 1938ம் ஆண்டு சென்னை இந்து தியாலஜிகல் உயர்நிலைப்பள்ளி முன் இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நடராஜனுக்கு ஏற்பட்ட வயிற்று வலியால் அவர் டிசம்பர் 30ம் தேதி சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்னிப்பு கடிதத்தை அளித்தால் விடுதலை செய்வதாக அப்போதைய அரசு கூறியபோது அதற்கு நடராசன் மறுத்துவிட்டார். இதனால் மருத்துவமனையிலேயே உடல்நிலை மோசமாகி தண்டனை கைதியாகவே 1939 ஜனவரி 15ல் உயிரிழந்தார். அதே ஆண்டு மார்ச் மாதத்தில் தாளமுத்து என்பவரும் இந்து தியாலஜி உயர்நிலைப் பள்ளி அருகே மறியல் செய்ததாக கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு மார்ச் 11ல் உயிரிழந்தார். தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கீழப்பழுவூர் சின்னசாமி (1962), கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், சிவகங்கை ராஜேந்திரன், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், கோவை பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி ஆகியோர் 1965ம் ஆண்டு தமிழ் மொழிக்காக உயிர் துறந்தனர். இவர்களில் விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து ஆகிய இருவரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்று அன்றைய முதல்வர் பக்தவச்சத்திற்கும், தமிழை காக்க பாடுபடுங்கள், அண்ணா நீங்கள் ஆணையிட்டால் தமிழகம் தங்கள் ஆணையை செய்ய காத்து கொண்டிருக்கிறது சும்மா இருந்து விடாதீர்கள் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு 1665 ம் ஆண்டு சில நாட்கள் இடைவெளிகளில் இருவரும் அடுத்தடுத்து விஷம் அருந்தி தங்கள் உயிரை மாய்த்து கொண்ட தமிழ் மொழிப்போர் தியாகிகள் ஆவர். இன்றைய தலைமுறையினரும் தமிழ் மொழிக்காக உயிர்நீத்த தியாகிகள் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக தமிழகத்தில் இவர்களது பெயரில் மணிமண்டபம் கட்டப்பட்டு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழுக்கு பெரும்பங்காற்றி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விராலிமலை சந்தைப்பேட்டை அருகே ரூ.3.18 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு மொழிப்போர் தியாகி சண்முகம் பெயரை சூட்ட வேண்டும். அதேபோல் கீரனூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் அரசு அலுவலகங்களுக்கு மொழிப்போர் தியாகி கீரனூர் முத்து பெயரை சூட்ட வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: