குரும்பூர் கூட்டுறவு வங்கியில் மோசடி செய்யப்பட்ட பணம், நகைகளை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் உண்ணாவிரதம்

திருச்செந்தூர், ஜன. 25: குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் மோசடி செய்யப்பட்ட பணம், நகைகளை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் வங்கி முன்பாக நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.பல கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களான விவசாயிகள் உள்ளிட்டோர் அடகு வைத்த நகை மற்றும் டெபாசிட் செய்த பணத்திற்கு இன்று வரை எந்த பதிலும் வங்கி சார்பில் தெரிவிக்கப்படவில்லையாம். இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள், உள்ளிட்டோர் பணமோசடியில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடி செய்யப்பட்ட  நகை மற்றும்  டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை மீட்டுத்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் முதன்மை உறுப்பினர்களான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டுறவு வங்கி முன்பாக நேற்று திரண்டதோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 போராட்ட ஒருங்கிணைப்பாளரும், நாலுமாவடி முன்னாள் பஞ்., தலைவருமான பிரபாகர் தலைமை வகித்தார். இதில் உழவர் முன்னணி மாநில தலைவர் தமிழ்மணி, சுகந்தலை முன்னாள் பஞ். தலைவர் ராஜதுரை, வீரமாணிக்கம் சுந்தர் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர். இருப்பினும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருந்த குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்ஐ முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார், இதுகுறித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எடுத்துரைத்தனர். மேலும் உடனடியாக கலைந்துச்செல்லும்படி அறிவுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கலைந்துச் சென்றனர்.

Related Stories: