2வது சுரங்க விரிவாக்க பணி கரிவெட்டி கிராம மக்களுடன் என்எல்சி அதிகாரிகள் ஆலோசனை

சேத்தியாத்தோப்பு, ஜன. 25: சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமம் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தையொட்டியுள்ள பகுதியாக உள்ளது.  இந்நிலையில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் சுமார் 12,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கரிவெட்டி கிராமத்தில் என்எல்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு என்எல்சி நிலம் எடுப்பு சம்பந்தமாக ஆலோசனை நடத்தினர். வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை, மாற்று உரிய இழப்பீடு, மாற்று குடியிருப்பு, மனை மற்றும் வீடு கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை கரிவெட்டி கிராம மக்கள் முன்வைத்தனர். இதற்கு என்எல்சி அதிகாரிகள் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கையகப்படுத்தப்படும் விலை நிலங்களுக்கு, ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும், வீட்டு மனைகளுக்கு, ஊரக பகுதியில் சென்ட்டுக்கு 40,000 ரூபாயும், நகர பகுதிகளில் 75,000 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்தனர். மேலும் குடியமர்வுக்காக 2178 சதுரடி மனையில், 1000 சதுர அடியில் வீடு கட்டித்தரப்படும் என்று தெரிவித்தனர். மேலும் நிரந்தர வேலை வழங்க முடியாது என்றும், ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அல்லது அதற்கான இழப்பீடு 10 லட்ச ரூபாய் முதல் 15 லட்ச ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் ஒரு சென்ட்டுக்கு 5 லட்சம் தரவேண்டும் எனவும், கட்டாயம் வீட்டுக்கு ஒருவர் நிரந்தர வேலை தரவேண்டும் எனவும் தெரிவித்தனர். நிலம் எடுப்பு சட்டத்தின்படி ஆய்வறிக்கை செய்ய வேண்டும் என கிராம மக்கள் கேட்டுக் கொண்டார். இதற்கு என்எல்சி அதிகாரிகள் உடன்படாமல் மேல் அதிகாரிகளிடம் ஆலோசித்து பதில் அளிப்பதாக கூறினர் திரும்பி சென்றனர்.

Related Stories: