என்எல்சி நிர்வாகம் வெளியேற்ற முயற்சி கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன் கிராம மக்கள் தர்ணா போராட்டம்

கடலூர், ஜன. 25:   விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், கடலூர் தொகுதி நாடாளுமன்ற செயலாளர் தாமரைச்செல்வன், வழக்கறிஞர் செல்வநாதன் ஆகியோர் தலைமையில் விருத்தாசலம் வட்டம் வடக்கு வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது: விருத்தாசலம் வட்டம் வடக்கு வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். தற்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பணிகளை காரணம் காட்டி  எங்களை அப்புறப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

 இப்பகுதியில் அருந்ததியர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர்கள் பல வருடங்களாக வசித்து வரும் நிலையில் அப்புறப்படுத்த முயலும் நிறுவன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களை வெளியேற்ற வேண்டும் என்றால் எங்களுக்கு மாற்று இடம் மற்றும் மறுவாழ்வு சட்டங்களுக்கான சலுகைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்த பிறகு அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் வசிக்கும் பட்டா தாரர்களுக்கு இதுவரை நிலம் கையகப்படுத்துதல் குறித்து அறிவிப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனி சார் ஆட்சியரிடம் (நில எடுப்பு) மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் எடுத்துரைப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மனு வழங்கிய கிராம மக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: