×

(தி.மலை) 3 நாட்களுக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி திரளான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, ஜன.25: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த 3 நாட்களுக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டதால், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி முதல் ஞாயிறு வரை 3 நாட்கள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய கடந்த வெள்ளி முதல் ஞாயிறு வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், வழக்கம் போல ஆறு கால பூஜைகள், வழிபாடுகள் தடையின்றி நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் வழக்கம் போல கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை 5.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். எனவே, திரளான பக்தர்கள் அதிகாலையில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், வழக்கம் போல ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கோயிலுக்குள் செல்லவும், தெற்கு கோபுரம் வழியாக வெளியே செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமர்வு தரிசனம் சிறப்பு தரிசனம் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. கோயில் நுழைவு வாயிலில் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை, கிருமி நாசினி மூலம் கைகளை தூய்மை செய்தல் ஆகிய கட்டுப்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. மேலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்று அளிக்கும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags : T.Malai ,Thiruvannamalai Annamalaiyar Temple ,
× RELATED பக்தர்களுக்கு தொல்லை கொடுத்த 30...