×

திருமயம் தாலுகா அலுவலகத்தில் இ-சேவை மையத்தில் மக்கள் அலைக்கழிப்பு

திருமயம். ஜன.24: திருமயம் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் இ-சேவை மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிக்கப் படுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அலுவலகத்தில் அரசு பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பட்டா, சிட்டா, பிறப்பு, இறப்பு, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ் பெற தனி அலுவலர்கள் கொண்டு செயல்படும். அதே சமயம் ஆதார் அட்டை சம்பந்தமாக தனி அலுவலர் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய ஆதார் கார்டு பதிவு, ஆதார் அட்டை பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மொபைல் எண் இணைப்பு உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆதார் சேவை பெறும் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆதார் அட்டை சம்பந்தமாக இ-சேவை மையத்துக்கு வரும் பொதுமக்களை ஊழியர்கள் ஏதாவது ஒரு காரணம் கூறி திருப்பி அனுப்பி விடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சொந்த வேலைகளை விட்டு ஆதார் சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள் ஆதார் அட்டை பெற முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ஆதார் அட்டை சம்பந்தமாக செயல்படும் ஆதார் இ-சேவை மையத்தில் இரண்டு ஊழியர்கள் வேலை பார்ப்பதாகவும், ஆதார் அட்டை சம்பந்தமாக ஏதேனும் புகார் செய்தால் சர்வர் வேலை செய்யவில்லை, ஆதார் அப்ளிகேஷன் புரோகிராம் அப்டேட் ஆகவில்லை என் ஏதாவது ஒரு காரணத்தை கூறி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஆதார் அட்டை பெறும் பொதுமக்கள் பல மாதங்களாக அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயம் தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் இ-சேவை மையத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி பொதுமக்களுக்கு உடனே தடையின்றி சேவை வழங்கிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirumayam taluka office ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு