‘லெமன் சிட்டி’ என பெயரெடுத்த புளியங்குடி நகராட்சியை கைப்பற்றுவது யார்?

புளியங்குடி, ஜன. 24: லெமன் சிட்டி என பெயரெடுத்த புளியங்குடி நகராட்சியை கைப்பற்றுவது யார்? என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.  மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது புளியங்குடி நகராட்சி. வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்து இருக்கும் ஒரே நகராட்சி புளியங்குடி மட்டுமே. லெமன் சிட்டி என்று அழைக்கப்படும் புளியங்குடி நகராட்சியில் 27,668 ஆண் வாக்காளர்களும், 28,082 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 55,750 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 33 வார்டுகளில் தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவில் மூன்று வார்டுகளும் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவில் மூன்று வார்டுகளும், பெண்கள் பொதுபிரிவில் 14 வார்டுகளும், பொது பிரிவில் 13 வார்டுகளுமாக பிரிக்கப்பட்டுள்ளது.

 இரண்டாம் நிலை நகராட்சியான புளியங்குடி 1969ம் ஆண்டில் நகராட்சியாக மாற்றப்பட்டது. முதல் தேர்தலின் போது திமுக-காங்கிரஸ் போட்டி உச்சத்தில் இருந்தது. அப்போது சுயேட்சையாக போட்டியிட்ட சிந்தாமணியை சேர்ந்த வெங்கட்ராமன் திமுகவில் சேர்ந்து புளியங்குடி நகராட்சியின் முதல் சேர்மனாக பதவி ஏற்றுக்கொண்டார். 1986ம் ஆண்டு நடந்த நகராட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் செல்லையா நாடார் வெற்றி பெற்றார். 1996ம் ஆண்டில் நடந்த தேர்தலில் தமாகாவை சேர்ந்த கார்த்திகாவை தோற்கடித்து அதிமுகவை சேர்ந்த குருவம்மாள் சங்கரபாண்டியன் வெற்றி பெற்றார். 2001ம் ஆண்டில் நடந்த தேர்தலில் அதிமுகவை சேர்ந்த தேவகி குழந்தைவேலு, 2006ம் ஆண்டில் நடந்த தேர்தலில் அதிமுகவை சேர்ந்த துரையப்பா, 2011ம் ஆண்டில் நடந்த தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சங்கரபாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தற்போது புளியங்குடி நகராட்சி சேர்மன் பதவி தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக ஆளுங்கட்சியாக இருப்பது மட்டுமின்றி புளியங்குடி நகராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதியும், மக்களவை தொகுதியும் திமுக வசமே உள்ளது. தற்போதைய திமுக அரசு ஏராளமான மக்கள் நல திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் செயல்படுத்தி வருகிறது. இதனை பயன்படுத்தி புளியங்குடி நகராட்சியை கைப்பற்ற திமுக வியூகம் அமைத்து வருகிறது.

Related Stories: