திருவந்திபுரம் கோயிலில் திருமணம் செய்ய குவிந்த மணமக்கள்

கடலூர், ஜன. 24: கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டு தலங்களை மூடவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு நாளான நேற்று கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் திருமணம் செய்வதற்காக 100க்கும் மேற்பட்ட மணமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். ஆனால் கோயிலின் உள்ளே திருமணம் செய்ய கோயில் நிர்வாகத்தினர் அனுமதிக்காததால், மணமக்கள் அனைவரும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற கோயிலின் வெளியே திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து அங்கு திருமணம் செய்ய வந்த திருமண வீட்டார் சிலர் கூறும்போது, இன்று (நேற்று) முகூர்த்த நாள் என்பதால் நாங்கள் ஏற்கனவே எங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய தேதி குறித்து விட்டோம். மேலும் இந்த கோயிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுதல் காரணமாக இங்கு வந்தோம். முழு ஊரடங்கு என்றாலும், தமிழக அரசு திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், திருமண பத்திரிகைகளை போலீசாரிடம் காட்டி இங்கு வந்தோம், என்றனர்.  

இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், இந்த கோயிலில் திருமணம் செய்ய முன்பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்ததால், யாருக்கும் முன் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே திருமணம் செய்ய வந்திருந்த மணமக்களுக்கு கோயிலின் உள்ளே திருமணம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை, என்றனர். இந்நிலையில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் அங்கு ஏராளமானோர் குவிந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

Related Stories: